

வங்கதேசத்தின் சிட்டகாங் நகரிலிருந்து 5 கப்பற்படைக் கப்பல்கள் மூலம், 1700க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை ஆள் நடமாட்டமில்லாத தனித்தீவுக்கு வங்கதேச அரசு இன்று அனுப்பி வைத்துள்ளது.
அடைக்கலம் தேடி வந்த அகதிகளை ஆள்நடமாட்டமில்லாத தனித்தீவில் கொண்டுவிடும் வங்கதேச அரசுக்கு சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த ரோஹிங்கியா அகதிகள் அனைவரும் சிட்டகாங் நகரிலிருந்து கடலில் 3 மணி நேரப் பயணத்துக்குப் பின் பாஷன் சார் தீவில் கொண்டுவிடப்படுகின்றனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வங்கதேச அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சிட்டகாங்கில் உள்ள காக்ஸ் பஜார் பகுதியில் இருந்து 1700க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் முகாமிலிருந்து நேற்று முன்தினம் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் கப்பற்படையின் 5 கப்பல்கள் மூலம் சார் தீவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
அகதிகளின் விருப்பத்துடன்தான் அவர்கள் அந்தத் தீவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர், அவர்கள் மீது எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அந்தத் தீவில் ஒரு லட்சம் பேர் வரை தங்கலாம். அதற்கான வசதிகள் இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.
ஆனால், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், “ ரோஹிங்கியா அகதிகளை வலுக்கட்டாயமாக சார் தீவுக்கு வங்கதேச அரசு அனுப்பி வைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை அந்தத் தீவில் மனிதர்கள் வாழவே இல்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அங்கு அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகள், வீடுகளைக் கட்டியுள்ளதாக வங்கதேச அரசு கூறுகிறது. மழை, புயல் காலங்களில் அந்தத் தீவு ஆபத்தானதாக மாறிவிடும்” எனக் கவலை தெரிவித்தனர்.
கடந்த 4-ம் தேதி ரோஹிங்கியா அகதிகள் 1,642 பேரை அந்தத் தீவுக்கு அனுப்ப வங்கதேச அதிகாரிகள் முயன்றபோது, மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அரசின் முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபையும், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
ஆனால், வங்கதேச அமைச்சர் உபயத்துல் காதர் கூறுகையில், “மியான்மர் அரசு ரோஹிங்கியா அகதிகளை ஏற்பதில் தாமதம் காட்டுகிறது. ஆதலால், வேறு வழியின்றி தனித்தீவுக்குச் செல்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
கடந்த 2017-ம் ஆண்டில் மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு அஞ்சி 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மர் வழியாக வங்க தேசத்துக்குள் வந்தனர். ரோஹிங்கியா அகதிகளைக் கொலை செய்தும், வீடுகளை எரித்தும், பெண்கள் பலாத்காரம் செய்தும் மியான்மர் ராணுவத்தினர் கொடுமையில் ஈடுபடுவதாக ரோஹிங்கியா மக்கள் குற்றம் சாட்டினர்.
மியான்மர் அரசுடன் பேசி, ரோஹிங்கியா மக்களை மீண்டும் மியான்மருக்குள் அனுப்ப வங்கதேச அரசு முயன்றது. ஆனால், அந்த மக்களை ஏற்க மியான்மர் அரசு தயாராக இல்லை. இதனால் ரோஹிங்கியா மக்கள் நாடற்றவர்களாக, எந்த நாட்டிலும் சேர்க்கப்படாமல் அலைகிறார்கள்.