Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

கரோனா வைரஸ் உண்மைகளை அம்பலப்படுத்திய சீன சமூக பத்திரிகையாளருக்கு 4 ஆண்டு சிறை

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சீன அரசு, வைரஸ் குறித்த உண்மைகளை மூடி மறைத்தது. சர்வதேச செய்தியாளர்கள் சீனாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும், சீனாவை சேர்ந்த மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கரோனா வைரஸ் குறித்த உண்மைகளை துணிச்சலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அவர்களில் ஒருவர், சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஜாங் சான் (37). கடந்த பிப்ரவரியில் வூஹான் நகருக்கு சென்ற அவர், சமூக பத்திரிகையாளராக மாறி கரோனா வைரஸ் குறித்த செய்திகளை சேகரித்தார்.

கரோனா நோயாளிகளின் அவல நிலை, மருத்துவமனைகளில் நிரம்பி வழிந்த கூட்டம் தொடர்பான வீடியோக்கள், செய்திகளை வீசாட், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார். திடீரென ஒரு நாள் அவர் காணாமல் போனார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மனித உரிமை அமைப்புகள், ஜாங் சான் குறித்து கேள்வி எழுப்பின. இதற்குபதிலளித்த சீன அரசு, வதந்திகளை பரப்பியதாக கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது. ஷாங்காய் நகர சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சங்கிலிகளால் பிணைத்து கட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் ஜாங் சான் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். சிறை நிர்வாகம் தரப்பில் அவருக்கு குழாய் மூலம் திரவ உணவு செலுத்தப்படுகிறது. சமூக பத்திரிகையாளர் ஜாங் சான் மீதான வழக்கு ஷாங்காய் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோது, "கரோனா வைரஸ் குறித்து வெளிநாட்டு ஊடகங்களில் ஜாங் சான் வதந்திகளை பரப்பினார்" என்று குற்றம் சாட்டினார்.

ஜாங் சான் தரப்பு வழக்கறிஞர் வாதிட்ட போது, "உண்மை தகவல்களை மட்டுமே ஜாங் சான் வெளியிட்டார்" என்று விளக்கமளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜாங் சானுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அப்போது நீதிமன்றத்தில் இருந்த ஜாங் சான் உரக்க குரல் எழுப்பி கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இதற்காக அவருக்கு கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

தீர்ப்பு குறித்து ஜாங் சானின் வழக்கறிஞர் சாங் கெகி கூறும்போது, "சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். நடக்ககூட முடியாத நிலையில் ஜாங் சான் உள்ளார். சிறையில் அவரை கொடுமைப்படுத்துகின்றனர். அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x