ஸ்பெயினில் 4 பேருக்குப் புதிய வகை கரோனா

ஸ்பெயினில் 4 பேருக்குப் புதிய வகை கரோனா
Updated on
1 min read

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் தொற்று ஸ்பெயினில் நான்கு பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாட்ரிட் மாகாண அரசுத் தரப்பில், “மாட்ரிட்டில் நான்கு பேருக்குப் புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நலமாக இருக்கிறார்கள். இந்தப் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால், தற்போதுவரை எந்தப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு எச்சரிக்கை தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரான்ஸிலும் இன்று ஒருவருக்குப் புதிய வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை மக்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in