

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கி வருகிறது.
இதுகுறித்து வேர்ல்டோ மீட்டர் வெளியிட்ட அறிக்கையில், “ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு உலகம் முழுவதும் 7,98,15,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 5 கோடிக்கும் அதிகமானவர்கள் குண்மடைந்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1.9 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் கொண்ட கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை மக்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.