

ஐக்கிய அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஐக்கிய அமீரகத்தின் அரசு ஊடகம் தரப்பில், “துபாயில் கரோனா தடுப்பு மருந்து நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பைசர் கரோனா தடுப்பு மருந்து இலவசமாகப் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள், 18 வயத்துக்கு உட்பட்டவர்கள் ஆகியோருக்குத் தடுப்பூசிகள் போடப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கவனமாக கடைப்பிடிக்காததன் காரணமாக தொற்று அதிகரித்து வருவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.