

சீனாவின் தெற்குப் பகுதியில் 5 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேரைக் காணவில்லை.
ஹுனான் மாகாணத்தில் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதாக ஜின்ஹுவா செய்தி நிறுவன அதிகாரி தெரிவித்தார். மேலும் ஜியாங்சி மற்றும் புஜியான் உள்ளிட்ட 5 மாகாணங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்த பேய் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 8,700 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டன. மேலும் 66 ஆயிரம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன. 42 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கடும் வெள்ளப்பெருக்கு காரண மாக பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட் டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு, மின் இணைப்புகளும் துண்டிக்கப் பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். உள்ளாட்சி நிர்வாகத்தினர் நிவாரணப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
மழையால் ஏற்பட்ட சேதம் காரணமாக ரூ.3,900 கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள தாக மதிப்பிடப்பட்டுள்ளது.