

பாகிஸ்தான் ராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த பலுசிஸ்தானைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கரிமா பலூச் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அடக்குமுறைகளுக்கு எதிராக அம்மாகாணத் தலைவர்கள் பலரும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். பாகிஸ்தானிடமிருந்து தங்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என பலுசிஸ்தானின் பிரிவினைவாதிகள் பலரும் அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பலுசிஸ்தான் ஆதரவு சமூக ஆர்வலரான கரிமா பலூச், பலுசிஸ்தானில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் கொடுத்து வந்தார். இதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு பிபிசி வெளியிட்ட சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானிலிருந்து வெளியேறி கனடாவில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கரிமா பலூச் மர்மான முறையில் மரணமடைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கனடா ஊடகங்கள், “சில நாட்களாக கரிமா மாயமான நிலையில், தற்போது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைக் கனடா அரசும், கரிமாவின் குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர். கரிமாவின் மரணம் தொடர்பாக போளீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கரிமாவின் மரணத்தைத் தொடர்ந்து பலுசிஸ்தான் தேசிய இயக்கம் 40 நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளது.