Published : 21 Dec 2020 12:49 PM
Last Updated : 21 Dec 2020 12:49 PM

மக்கள் முன்னிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 

மக்கள் முன்னிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கனடாவில் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தனது வயது ஒத்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் காலகட்டம் வரும்போது தானும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவுள்ளதாக ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.

கடந்தாண்டு டிசம்பரில் உலகை அச்சுறுத்தத் தொடங்கிய கரோனா, தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி பெருந்தொற்றாக உவவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் 7 கோடிக்கும் மேலானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ரஷ்யா எனப் பல நாடுகளும் மருத்துவ அவசரப் பயன்பாடு அடிப்படையில் கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக் கொண்டுவந்துள்ளன. கனடாவில், ஃபிஸ்ஸர்- பயோஎன்டெக் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஜஸ்டின் ட்ரூடோ, "கனடாவில் தடுப்பூசி பணிகள் தொடங்கியுள்ளன. 40 வயதுக்கு மேற்பட்ட நல்ல ஆரோக்கியமான நபர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முறை வரும்போது நிச்சயமாக நான் உற்சாகமாக மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன்" என்றார். வரும் டிசம்பர் 25-ல் ஜஸ்டின் ட்ரூடோ 49-வது வயதை எட்டுகிறார்.

கடந்த மார்ச் மாதம் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரகரிக்கு கரோனா உறுதியானது. பின்னர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் கரோனா உறுதியானது. அவர் இரண்டு வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x