

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷரீப், இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் நிழலைக் கூட நாங்கள் பாகிஸ்தானில் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி கூறியுள்ளார்.
லண்டனில் ராணுவ மற்றும் பாதுகாப்புக்கான ராயல் யுனைடெட் சர்வீசஸ் ஆய்வுக் கழகத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
இஸ்லாமிக் ஸ்டேட்டை பொறுத்தவரை அதன் நிழலைக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இஸ்லாமாபாத்தில் சிலர் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புடன் கூட்டணியை காண்பித்துள்ளனர், இது மிக மிக அபாயகரமானது.
எதிர்கால சவால் ஐ.எஸ். தீவிரவாதமே. இது மிகப்பெரிய பெயர். அல்கய்தா ஒரு பெயர் அவ்வளவே ஆனால் தற்போது இஸ்லாமிக் ஸ்டேட் அதைவிட மிகப்பெரிய பெயர்.
ஆப்கானில் தாலிபான்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்துவது மிக மிக அவசியம், இதனை அவர்கள் முறையாகச் செய்யவில்லையெனில் தாலிபான்கள் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து விடும் பேரபாயம் உள்ளது. எனவே ஆப்கன் அரசு-தாலிபான் சமரசம் மிக முக்கியமானது” என்றார் ஷரீப்.
கராச்சியில் ஷியா முஸ்லிம் பிரிவினர் 43 பேர் தாக்குதலில் பலியாகினர், இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றது. வடமேற்கு பாகிஸ்தானில் ஐ.எஸ். ஜிஹாதிகளுக்கான ஆதரவு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வெளியாகின. பாகிஸ்தான் நகரங்களில் ஐ.எஸ். ஆதரவு சுவரொட்டிகள் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில்தான் ஷரீப் இவ்வாறு கூறியுள்ளார்.
1990களில் தாலிபான்களை ஆதரித்த பாகிஸ்தான் தற்போது ஆப்கன் அரசுடன் தாலிபான்கள் சமரசம் செய்து கொள்வதை விரும்பி அதற்காக முயற்சி செய்து வருகிறது.
இதன் முயற்சியாக கடந்த ஜூலை மாதம் ஆப்கன் அரசு-தாலிபான் பேச்சு வார்த்தையை நடத்தியது பாகிஸ்தான். இந்த மாத இறுதியில் இன்னொரு சுற்றுப் பேச்சு வார்த்தை நடைபெறவிருந்தது, ஆனால் தாலிபான் தலைவர் முல்லா ஓமர் மரணச் செய்தி இதனை முடக்கியுள்ளது.