கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டால் முதலையாகக் கூட மாறலாம்: பெண்களுக்கு தாடி வளரலாம்: பிரேசில் அதிபர் சர்ச்சைப் பேச்சு

கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டால் முதலையாகக் கூட மாறலாம்: பெண்களுக்கு தாடி வளரலாம்: பிரேசில் அதிபர் சர்ச்சைப் பேச்சு
Updated on
1 min read

கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டால் நீங்கள் முதலையாகவும் மாறலாம் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 7-ம் தேதி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து சில நாட்களில் அவர் குணமடைந்தார்.

கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்கெனவே கூறிவந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இந்த நிலையில் பைசர் கரோனா தடுப்பு மருந்து நிறுவனத்துடன் பிரேசில் ஒப்பந்தம் போட்டுள்ளது.

ஆனால், மக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் நாள் குறித்து பிரேசில் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கூறும்போது, “பைசர் கரோனா தடுப்பு மருந்து நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளதில் தெளிவாக உள்ளோம். தடுப்பு மருந்தால் ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை. கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டால் நீங்கள் முதலையாகவும் மாறலாம். பெண்களுக்குத் தாடியும் வளரலாம்” என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னார், கரோனா தடுப்பு மருந்தை நான் செலுத்திக்கொள்ள மாட்டேன் என்று ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in