

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அலாஸ்கா மருத்துவ பணியாளருக்கு கடுமையான ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டுள்ளது. இவருக்கு பைசர் நிறுவனம் மற்றும் பயோ என்டெக் நிறுவனம் கூட்டாக தயாரித்த தடுப்பூசி போடப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கரோனா தடுப்பூசி போட்ட சிலநிமிடங்களில் அவருக்கு கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிகிறது. இதே போல் கடந்தவாரத்தில் பிரிட்டனில் 2 பேருக்குஒவ்வாமை ஏற்பட்டது. இதையடுத்து உணவு மற்றும் மருந்துகளால் ஒவ்வாமை மற்றும் தீவிரஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளவர்கள் பைசர் -பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று பிரிட்டன் அரசு அறிவித்தது.
ஆனால், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு பெரும்பாலான அமெரிக்கர்கள் ஒவ்வாமை இருந்த போதிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என தெரிவித்திருந்தது.
எனினும் கடுமையான மருந்துகளால் ஒவ்வாமை தன்மை உடையவர்கள் அல்லது குறிப்பிட்ட தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள், கரோனா தடுப்பூசியை ஏற்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது. ஆனால், அலாஸ்காவில் கடுமையான ஒவ்வாமைக்கு ஆளானவர் இதற்கு முன்பு எவ்வித ஒவ்வாமைக்கும் உள்ளாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்ட உடனேயே மாற்று மருத்துவம்அளிக்கப்பட்டதில் அவர் குணமடைந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.