

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி தெரிந்தவுடன் மக்ரோன் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். கரோனா உறுதிப்பட்டதைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மக்ரோன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலக்கட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உணவு விடுதிகள் திறக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.