

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கின்சி ஸ்காட் தன்னுடைய சொத்தில் இருந்து நடப்பாண்டில் 5.9 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 43,000 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்கள், மக்கள் நலத்திட்டங்களுக்காக நன்கொடை வழங்குவது அதிகரித்து வருகிறது. பில் கேட்ஸ், வாரென் பஃபெட், மார்க் சுகர்பெர்க் வரிசையில் தற்போது மெக்கின்சி ஸ்காட்டும் தன் சொத்துக்களை மக்களுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார். 50 வயதாகும் இவர் நாவலாசிரியரும் தொழிலதிபரும் ஆவார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கும் இவருக்கும் கடந்த ஆண்டு விவாகரத்தானது. அதன் பிறகு அமேசான் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகள் இவர் வசமானது. அப்போதே தனது சொத்தில் பெரும் பகுதியை மக்கள் சேவைக்கு வழங்குவேன் என உறுதி அளித்தார். இந்நிலையில் அமேசான் நிறுவனப் பங்குகள் ஓராண்டில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன. இதன் மூலம் இவருடைய சொத்து மதிப்பு 23.6 பில்லியன் டாலர் என்ற நிலையில் இருந்து 60.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 18-ம் இடத்திலும் உள்ளார்.
இவர் கடந்த ஜூலையில் மக்கள் பணிக்காக 1.7 பில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் 4.2 பில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் மூலம் ஓராண்டில் அதிக மதிப்பில் நன்கொடை வழங்கியவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மெக்கின்சி ஸ்காட் கூறியதாவது:
கரோனா நெருக்கடி காலத்தில் பெரும்பாலான அமெரிக்கர்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டிருக்கிறது. சுகாதார பிரச்சினைகள் ஒரு பக்கம் எனில் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம். குறிப்பாகப் பெண்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேசமயம் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இந்த சமநிலையின்மையை சரிசெய்வது நம் கடமை.
என் பங்குக்கு என்னுடைய கஜானா பெட்டி காலியாகும் வரை நான் நன்கொடை வழங்குவேன். உணவின்றி பசியில் வாடுவோர், நிறவெறியால் பாதிப்புக்கு உள்ளாவோர், நன்கொடை வசதிகள் சென்று சேராத இடங்கள், வறுமை அதிகமாக இருக்கும் பகுதிகளில் முதன்மை கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு மெக்கின்சி ஸ்காட் கூறினார்.
மேலும், தன்னுடைய சொத்துக்களை விரைவாக மக்களுக்கு வழங்க கூடிய வழிகளையும் அவருடைய குழு தீவிரமாக யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவருடைய குழு 6,500 தொண்டு நிறுவனங்களை ஆராய்ந்து அவற்றில் 384 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவற்றின் மூலம் மக்கள் சேவை திட்டங்களை முன்னெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மெக்கின்சி ஸ்காட்.