Published : 21 Oct 2015 10:16 AM
Last Updated : 21 Oct 2015 10:16 AM

உலக மசாலா: மிளகாய் உண்பவர்!

சீனாவின் ஸெங்ஸோவ் பகுதியில் வசிக்கிறார் லி யங்ஸி. அவர் தோட்டத்தில் 8 விதமான பழங்களை விளைவிக்கிறார். அத்தனையும் மிளகாய் பழங்கள்.

‘சில்லி கிங்’ என்று அழைக்கப்படும் லி யங்ஸி, தினமும் 2.5 கிலோ மிளகாய்களைச் சாப்பிடுகிறார்.

‘‘இந்தப் பகுதியில் சில்லி கிங் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. காலையில் எழுந்து மிளகாய்ச் செடியை வைத்துதான் பல் துலக்குவேன். காலை முதல் இரவு வரை 2.5 கிலோ மிளகாய்களைச் சாப்பிட்டு விடுவேன். சிறிய வயதில் இருந்தே எனக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. உணவிலும் அதிக மிளகாய்களைச் சேர்த்துக்கொள்வேன்.

மிளகாய் இல்லாவிட்டால் சுவையே கிடையாது. உணவில் சேர்த்தது போக மீதி மிளகாய்களை, நொறுக்குத் தீனி போல போகும்போது, வரும்போது கொறித்துவிடுவேன். எனக்கு மட்டுமே இந்தச் சக்தி இருக்கிறது. என்னைப் போல முயற்சி செய்த என் மகனை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது. அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வேன். மற்ற மனிதர்களைப் போல சாதாரணமாகத்தான் இருக்கிறேன்’’ என்கிறார் லி யங்ஸி.

படிக்கும்போதே கண்கலங்குகிறதே…

விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் மிகப் பெரிய அடியை எடுத்து வைத்திருக்கிறார்கள். உறைய வைக்கும் குளிரில் மூன்று வயது குழந்தையின் உடலைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் இறந்தவருக்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பு உருவானால், இந்த உடலை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்காக மாத்ரின் நாவோரட்போங் என்ற குழந்தையின் உடல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. தாய்லாந்து தம்பதியரின் மகளான மாத்ரின் மூளை புற்றுநோயால் இறந்து போனாள். இன்றைய காலகட்டத்தில் மரணம் அடைந்தவர்களை உயிர்ப்பிக்கும் வசதி இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பு உருவாகும்போது மாத்ரினையும் உயிர்ப்பிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மாத்ரினின் அம்மாவும் அப்பாவும் மருத்துவத் துறையச் சேர்ந்தவர்கள் என்பதால் இதற்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

‘‘என் முதல் குழந்தை பிறந்த உடன் கர்ப்ப பையை எடுக்க வேண்டியதாகிவிட்டது. சோதனைக் குழாய் மூலம் மாத்ரின் பிறந்தாள். ஒருகாலத்தில் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பிறப்பது சாத்தியமில்லாத விஷயமாக இருந்தது. இன்று அது சர்வசாதாரணமாகிவிட்டது. அதேபோல எதிர்காலத்தில் இறந்த உடல்களை உயிர்பிக்கலாம் என்று நம்புகிறேன்’’ என்கிறார் மாத்ரினின் அம்மா. அமெரிக்காவில் இருந்து வந்த நிபுணர்கள் குழு மார்த்ரின் இறந்த உடன், உடலில் உள்ள நீர்ச் சத்துகளை வெளியேற்றி, மருந்துகளைச் செலுத்தியது.

இதன் மூலம் திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சவப்பெட்டியில் உடலை வைத்து எடுத்துச் சென்றுவிட்டது. மாத்ரின் 134-வது உடலாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறாள். மாத்ரினின் அம்மாவும் அப்பாவும் தங்கள் உடல்களையும் பாதுகாக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் மாத்ரின் உயிருடன் வர நேர்ந்தால், அவளைப் பார்த்துக்கொள்வதற்கு அம்மாவும் அப்பாவும் அவசியம் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மாத்ரின் குடும்பம் மீண்டும் ஒன்று சேரட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x