

சவுதியில் முதல் நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பு மருந்தைப் பெறுவதற்குப் பதிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கரோனா தடுப்பு மருந்தைப் பெறுவதற்கான பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுவரை 1,00,546 பேர் கரோனா தடுப்பு மருந்தைப் பெற விண்ணப்பித்துள்ளனர். 65 வயதைக் கடந்தவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தை முதலில் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
சவுதியில் இதுவரை 3,60,155 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,069 பேர் பலியாகி உள்ளனர். 3,50,993 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் யாத்ரீகர்களையும், உள்ளூர் மக்களையும் தொழுகை நடத்த சவுதி அரேபிய அரசு அனுமதிக்கவில்லை. புனிதப் பயணம் வரும் வெளிநாட்டு மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. புனித ரமலான் பண்டிகையன்றுகூட மக்கள் யாரையும் தொழுகை நடத்த அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இந்த நிலையில் பொது மக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணியில் சவுதி அரசு இறங்கியுள்ளது.