Published : 16 Dec 2020 09:05 AM
Last Updated : 16 Dec 2020 09:05 AM

கூகுள் சேவைகள் திடீரென முடங்கியது ஏன்?

இணையத்தில் எல்லாம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கின்றன. ஜிமெயில்கள் பறக்கின்றன, யூடியூப் வீடியோக்கள் சிக்கல் இல்லாமல் தரவிறக்கம் ஆகின்றன. ஆனால், திங்கள்கிழமை மாலை இணையத்தில் சூறாவளி வீசுவதுபோல இருந்தது. ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் வழங்கும் சேவைகள் திடீரென முடங்கியது தான் இதற்கு காரணம். கூகுள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ விளக்கப்படி 45 நிமிடங்கள்தான் இந்த பாதிப்பு நீடித்தது என்றாலும், கூகுள் சேவையை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் திகைத்துப்போய்விட்டனர் எனலாம்.

சாமானிய பயனாளிகள் வழக்கம் போல ஜிமெயில்களை அனுப்ப முடியாமல் தடுமாறினர் என்றால், வர்த்தக பயனாளிகள் வேறுவிதமான இன்னல்களுக்கு உள்ளானார்கள். தேடியந்திர ஜாம்பவானான கூகுள், ஜிமெயில், கூகுள்டிரைவ், கூகுள் காலண்டர், வரைபடம், யூடியூப், கூகுள் மீட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருவதால், அதன் சேவையில் ஏற்பட்ட பாதிப்பு, பலரையும் தவிக்க வைத்தது. ஒரு பக்கம், கூகுள் சேவை முடக்கம் என்பது தொடர்பான மீம்களும், விமர்சனங்களும், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டாலும், கூகுள் பயனாளிகளுக்கோ, இந்த திடீர் முடக்கம் நடைமுறையில் பாதிப்பை உண்டாக்கியது.

என்ன நடந்தது?

இணையத்தில், இதுபோன்ற தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், கூகுள் சேவைகள் முடக்கம், எந்த அளவுக்கு இணைய உலகம் கூகுள் சேவைகளை சார்ந்திருக்கிறது என்பதை புரிய வைத்தது. ஜிமெயில் போன்ற நேரடி கூகுள் சேவைகள் முடங்கியதோடு, கூகுளை சார்ந்திருந்த வேறு பல வர்த்தக நிறுவன சேவைகளும் பாதிக்கப்பட்டன. அதன் காரணமாகவே, இந்த கோளாறு முக்கியமாகிறது. பொதுவாக, கூகுள் உள்ளிட்ட பெரிய இணைய நிறுவனங்கள், தங்கள் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதில் தனி கவனம் செலுத்துகின்றன. டேட்டா சென்டர், பேக்கப், பழுது கண்காணிப்பு என்று அவை தங்கள் சேவைகளுக்கான முதுகெலும்பு அம்சங்களை பேணிக் காப்பதில் முனைப்புடன் இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக கூகுள் இந்த விஷயத்தில் இன்னும் மெனக்கெடுகிறது. கடந்த 2019- ம் ஆண்டு சின்னதாக அமெரிக்க பயனாளிகளுக்கு கூகுள் சேவைகள் முடங்கியது தவிர, பெரிதாக எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஆனால், அண்மையில் ஏற்பட்ட முடக்கத்தை கூகுளேகூட எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

கூகுள் சேவைகள் திடீரென இப்படி முடங்கியதற்கு என்ன காரணம்? கூகுள் தரப்பில் இந்த கேள்விக்கு தரப்பட்ட அதிகாரபூர்வ விளக்கத்தில், அதன் ஆதண்டிகேஷன் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த பாதிப்பு உண்டானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே விளக்கத்தில், இன்டர்னல் ஸ்டோரேஜ் சிக்கலும் இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தொழில்நுட்ப மொழி குழப்பம் அளித்தாலும், எளிதில் புரிந்து கொள்ள கூகுள் சேவைகளுக்கான உள் சேமிப்பு (ஸ்டோரேஜ்) சிக்கலுக்குள்ளானதாக வைத்துக்கொள்ளலாம். கூகுள் எண்ணற்ற சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் எல்லாம் செயல்பட ஸ்டோரேஜ் வசதி தேவை. இந்த வசதியை அணுகுவதற்கான சரிபார்த்தலும் தேவை. இதுவே ஆதண்டிகேஷன் எனப்படுகிறது. ஒவ்வொரு சேவைக்கும் தேவையான ஸ்டோரேஜ் அளவை பிரித்தளிக்கும் அம்சத்தில் சிக்கல் ஏற்பட்டதால், அவை முடங்கின. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட்டிஸ்கில் மேலும் தகவல்களை சேமிக்க இடமில்லாமல் போனால் என்னாகுமோ, அதுபோல நிகழ்ந்ததாக புரிந்து கொள்ளலாம்.

நிலைமை சீரானது

கூகுள் பயனாளிகள் அதன் பெரும்பாலான சேவைகளை அணுகும்போது, இந்த சரி பார்த்தல் வசதி இயங்க வேண்டும் என்பதால், ஸ்டோரேஜ் சிக்கலால் அவை முடங்கின. இதனால்தான் ஜிமெயில் செயல்படாமல் போனது. ஆனால், ஏற்கெனவே கூகுள் சேவையில் நுழைந்திருந்தவர்களுக்கோ அல்லது கூகுள் கணக்கில் இருந்து வெளியேறிய நிலையில் அதன் சேவைகளை பயன்படுத்தியவர்களுக்கோ அதிக பிரச்சினை இல்லை என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த பாதிப்பு அதிக நேரம் நீடிக்காமல் கூகுள் சரி செய்துவிட்டது. இதற்கான விளக்கம் அளித்ததோடு, எங்கு தவறு நடந்தது என்பது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக கூகுள் தனக்குத்தானே பதில் அளித்துக்கொள்ள வேண்டிய கேள்விகள் பல இருக்கின்றன என்றாலும் பொதுவாக இணையவாசிகள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளும் பல இருக்கின்றன. கூகுள் சேவைகளை இணைய உலகம் எந்த அளவுக்கு சார்ந்திருக்கிறது என்பதை இந்த பாதிப்பு உணர்த்தியிருப்பதோடு, கிளவுட் தொழில் நுட்பத்தை, இணைய உலகம் எந்த அளவுக்கு நம்பியிருக்கிறது என்பதையும் உணர்த்தியுள்ளது. பெரும்பாலான கூகுள் சேவைகள் கிளவுட் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன.

அதனால்தான் ஜிமெயிலை எந்த இடத்தில் இருந்தும் அணுக முடிகிறது. கூகுள் டிரைவை எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்த முடிகிறது. ஆனால், இந்த கிளவுட் நுட்பத்தில் ஏதேனும் ஒரு கோளாறு ஏற்பட்டால் அதன் பாதிப்பு பல மடங்காக இருக்கும் எனும் உண்மை இணையவாசிகளுக்கு புரிந்திருக்கிறது. அமெரிக்க பயனாளி ஒருவர் கூகுள் ஹோம் சாதனம், செயலிழந்ததால் தனது குழந்தையோடு வீட்டில் விளக்குகள் அணைந்து இருளில் தவிப்பதாக டிவிட்டரில் புலம்பியிருந்தார். மேலும், கூகுள் போன்ற ஜாம்ப
வான்களின் கிளவுட் நுட்பத்தை சார்ந்திருக்கும் மூன்றாம் தரப்பு சேவைகளையும் இது பாதிக்கும் என்பதும் புரிந்திருக்கிறது.

பேக்கப் தேவை

தொழில்நுட்ப கோளாறுகளால் பெரிய அளவில் டிஜிட்டல் சேவைகள் முடங்காமல் பார்த்துக்கொள்வது இணைய நிறுவனங்களின் பொறுப்பு என்றாலும், இந்த எச்சரிக்கையை மீறி இணைய கோளாறு ஏற்படும்போது என்ன செய்யலாம் எனும் கேள்வியை இணையவாசிகள் கேட்டுக்கொள்வதும் நல்லது. இதற்கு வல்லுனர்கள் அளிக்கும் பதில், ஒற்றை சேவையை மட்டும் நம்பியிருக்காமல், மாற்று சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.

உதாரணத்துக்கு ஜிமெயில் தவிர வேறு ஒரு துணை மெயிலும் இருப்பது நல்லது. இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இணைய வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அது, இணையவாசிகளின் தயார் நிலை தொடர்பானது. டிஜிட்டல் யுகத்தில் பலரும் இணைய சேவைகளுக்கு பழகியிருக்கிறோம். ஆனால், ஏதேனும் காரணத்தினால் இணைய சேவை இயங்காமல் போனால் என்ன செய்வோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எதிர்பாராத சிக்கல் ஏற்படும் நேரத்தில் முக்கிய தகவல்களை மீட்டெடுக்கும் வழிகளை அறிந்திருப்பது, வழக்கமான சேவைகள் முடங்கினாலும் செயல்பாடுகளை தொடர்வதற்கான பேக்கப் (backup) வசதியை பெற்றிருப்பது ஆகியவை முக்கியம் என்கின்றனர். இத்தகைய தேவையின் அருமையைதான் அண்மை முடக்கம் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

-சைபர்சிம்மன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x