

கூகுளின் முதுநிலை வடிவமைப்பு மேலாளர் டேனியல் ஷிப்லேகாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதம் கேட்டி என்ற 4 வயதுச் சிறுமியிடம் இருந்து வந்திருந்தது. தனது நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்து அதில் பச்சை நிற எழுத்துகளில் பாசத்தைக் கொட்டி எழுதியிருந்தாள் கேட்டி.
குழந்தைக்கே உரிய கோணல் மாணலான மழலை எழுத்துகளில் என்ன எழுதப்பட்டிருந்தது தெரியுமா?
‘அன்புள்ள கூகுள் பணியாளர்களே! எங்க அப்பாவுக்கு வழக்கமாக சனிக்கிழமைதான் வார விடுமுறை. இந்த முறை புதன்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும். அவருக்கு அன்றுதான் பிறந்தநாள். தயவு செய்து பிறந்தநாள் கொண்டாட புதன்கிழமை விடுமுறை கொடுங்கள். இது கோடைகாலம் தெரியுமா?’ என்று எழுதியிருந்தார்.
இதைப் படித்த ஷிப்லேகா நெகிழ்ந்துவிட்டார். உடனடியாக பதில் கடிதம் கேட்டிக்கு அனுப்பப்பட்டது. அதில், “அன்புள்ள கேட்டி, உனது தந்தை கூகுளின் மிகச்சிறந்த வடிவமைப்பாளர். அவரின் பிறந்தநாளுக்காக புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூலை முதல் வாரம் முழுவதும் அவருக்கு விடுமுறை அளிக்கிறோம். என அக்கடித்தில் ஷிப்லேகா தெரிவித்துள்ளார். சிறுமியின் கடிதமும், கூகுளின் பதில் கடிதமும் இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.