Published : 07 Oct 2015 10:58 AM
Last Updated : 07 Oct 2015 10:58 AM

உலக மசாலா: அன்பு வேறுபாடு அறியாது!

பஹாமாஸ் நாட்டில் மரத்திலிருந்து கீழே விழுந்த ரக்கூன் குட்டியை, அதன் தாய் கைவிட்டது. சின்னஞ்சிறு குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்தார் ரோஸி கெம்ப். பம்ப்கின் என்று பெயரிடப்பட்டு, தாங்கள் வளர்க்கும் 2 நாய்களுடன் சேர்த்து வளர்த்து வந்தார். நாய்கள் இரண்டும் பம்ப்கினை மிக அன்பாகப் பார்த்துக்கொண்டன. விளையாட்டுக் காட்டின. இன்றுவரை ரக்கூனுக்குத் தான் வேறொரு வகை விலங்கு என்று தெரியாது.

ஆனால் நாய் குடும்பத்தைச் சேராத விலங்கு என்று தெரிந்தாலும் நாய்கள் தங்கள் குட்டியைப் போலப் பார்த்துக்கொள்கின்றன. நாய்கள் மீது கால்களைப் போட்டுப் படுத்து உறங்குவது, முகத்தோடு முகம் வைத்து விளையாடுவது என்று ரக்கூனின் ஒவ்வொரு செயலும் அத்தனை அழகாகப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றன. ‘’காட்டு வாழ்க்கையை பம்ப்கின் அறிந்துகொள்ளவில்லை. ஆனால் குளிர்சாதன அறையில் தங்குவதற்கும், கழிவறையைப் பயன்படுத்துவதற்கும், மேஜையில் அமர்ந்து சாப்பிடுவதற்கும் பழகிக்கொண்டது’’ என்கிறார் ரோஸி.

அன்பு வேறுபாடு அறியாது!

Body Integrity Identity Disorder என்பது உளவியல் தொடர்பான ஒரு குறைபாடு. அதாவது தன் உடலில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும் என்று நம்புவார்கள். குறைபாடே இல்லாவிட்டாலும் குறைபாட்டை வரவழைத்துவிடுவார்கள். அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் வசிக்கிறார் 30 வயது ஜுவெல் ஷுபிங். சிறிய வயதில் இருந்தே தனக்குப் பார்வை தெரியக்கூடாது என்று நினைத்து வந்தார். ’’எனக்குப் பார்வை தெரிவதை விட தெரியாமல் இருப்பதில்தான் மகிழ்ச்சியாக இருந்தது. ஆறு வயதிலேயே பார்வை தெரியக்கூடாது என்பதற்காகச் சூரியனைப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன். ஆனாலும் பார்வை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் இருந்தது.

நாளாக நாளாகப் பார்வை எப்படியாவது பறிபோய்விட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. கண்களை மூடிக்கொண்டு, கறுப்புக் கண்ணாடி அணிந்து செல்ல ஆரம்பித்தேன். பிரெய்ல் எழுத்துகளை 20 வயதில் படித்து முடித்தேன். கண்களை மரத்துப் போகச் செய்யக்கூடிய சொட்டு மருந்துகளைத் தொடர்ந்து போட்டேன். மருந்து வழிந்து, என் கன்னம் எல்லாம் தீயாக எரிந்தது. ஆனாலும் பார்வை போய்விட வேண்டும் என்பதற்காகப் பொறுத்துக்கொண்டேன்.

ஆறு மாதங்களில் என் பார்வை படிப்படியாகக் குறைந்தது. என் பிரச்சினையை என் வீட்டில் யாரும் புரிந்துகொள்ளவில்லை. என் காதலர் என்னுடன் இருந்து, இயற்கையான வழிகளில் பார்வையைப் போக்க உதவினார். ஒருநாள் காலை எழுந்தபோது இருளாக இருந்தது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மருத்துவரிடம் பரிசோதித்து அதை உறுதி செய்துகொண்டேன். பிரெய்ல் மூலம் படித்து பட்டதாரியாகிவிட்டேன். பார்வையற்றவர்கள் போல வாழப் பழகிக்கொண்டேன்.’’ என்கிறார் ஜுவெல். இன்றைய நிலையில் இது குணப்படுத்த முடியாத குறைபாடு என்கிறார் டாக்டர் மைகேல் ஃபர்ஸ்ட்.

ஐயோ… மிக மோசமான குறைபாடாக இருக்குதே…

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் வசிக்கிறார் 15 வயது ஹாவோ டாங்டாங். தினமும் மாட்டின் உருவம் கொண்ட முகமூடியை அணிந்துகொண்டு, தன் மீது அமரச் சொல்கிறார். அதற்காக 50 ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கிறார். ஒரு பெண் இப்படிப் பணம் சம்பாதிப்பதைப் பார்த்து எல்லோருக்கும் வருத்தமாக இருக்கிறது.

‘’என் அப்பாவின் தொழில் நஷ்டமடைந்துவிட்டது. அந்த அதிர்ச்சியில் பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்துவிட்டார். அம்மாவும் இறந்து போய்விட்டார். என் சகோர, சகோதரிகள் பள்ளிக்குப் போகவேண்டும். என் அப்பாவுக்கு மட்டும் மாதம் 50 ஆயிரம் ரூபாய் மருத்துவத்துக்குச் செலவாகிறது. 15 வயது என்பதால் வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை. எனக்கு வேறு வழி தெரியாமல் சாலைகளில் பிச்சை எடுத்து வந்தேன். என் கதையைக் கேட்ட ஒருவர்தான் முகமூடி அணிந்து, முதுகில் சவாரி ஏற்றி, கட்டணமாகப் பணம் பெறும் ஆலோசனையை வழங்கினார். இது பிச்சை எடுப்பதை விடக் கொஞ்சம் நிம்மதியான வேலை. என்னைச் சிலர் ஏமாற்றுக்காரி என்கிறார்கள். அதற்காக நடுநடுவே என் அப்பாவைச் சக்கரநாற்காலியில் அமர வைத்துக்கொண்டு, இந்த வேலையைச் செய்து வருகிறேன். பகல் முழுவதும் உழைத்தால் தினமும் 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

இது அதிகப்படியான வருமானம்தான். ஆனால் என் அப்பாவின் மருத்துவச் செலவுக்கே பத்தாது. 5 பேர் சாப்பிட வேண்டும். 3 பேர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். மழை பெய்தால் அன்று வருமானம் கிடையாது. அருகில் இருக்கும் கடைக்காரர்கள் துரத்துவார்கள். குடிகாரர்கள் என்னிடம் தகராறு செய்வார்கள். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நான் கவலைப்படுவதில்லை. என் அப்பாவுக்கு விரைவில் குணமாக வேண்டும், அவர் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். விரைவில் நான் பள்ளி செல்ல வேண்டும்’’ என்கிறார் டாங்டாங்.

விரைவில் உங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கட்டும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x