Last Updated : 16 Oct, 2015 10:07 AM

 

Published : 16 Oct 2015 10:07 AM
Last Updated : 16 Oct 2015 10:07 AM

தேர்தல் விளம்பர நிதி மோசடி வழக்கு: விசாரணை ஆணையத்தில் ஆஜராகி மகிந்த ராஜபக்சே வாக்குமூலம்

விளம்பர கட்டணம் செலுத்தாமல் நிதி மோசடி செய்த வழக்கில், விசாரணை ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வாக்குமூலம் அளித்தார்.

இலங்கை அதிபர் தேர்தலின் போது, ஏராளமான விளம்பரங்களை அரசு தொலைக்காட்சியில் வெளியிட அப்போதைய அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். அதன்படி வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணத்தை ராஜபக்சேவின் கட்சியோ அவரோ செலுத்தவில்லை. இதில் கணிசமான நிதி மோசடி நடந்துள்ளதாக கூறி ராஜபக்சே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மோசடி மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான குடியரசு தலைவரின் ஆணைய குழு, ஏற்கெனவே ராஜபக்சே வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பெற்றது. இந்நிலையில் குடியரசு தலைவர் ஆணையத்தின் உத்தரவின்படி, விசாரணை குழு முன்னிலையில் ராஜபக்சே நேற்று ஆஜரானார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை குழுவினர் கேட்டு பதிலை பதிவு செய்து கொண்டனர். மேலும், முன்னாள் ஊடகத் துறை அமைச்சர் கெகலியா ரம்புக்வெல்லாவும் ஆணையக் குழு முன்னிலையில் ஆஜரானார்.

இலங்கை தேர்தலில் எல்லா வேட்பாளர்களையும் சமமாகவே நடத்தவும், எல்லா வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளையும் சமமான முறையில் ஒளிபரப்பவும் வேண்டும் என்று தேர்தல் ஆணைய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அரசு தொலைக்காட்சியை தங்கள் பிரச்சாரத்துக்காக ராஜபக்சேவும் அவரது கட்சியும் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், ஒளிபரப்புக்கான கட்டணத்தை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x