

ஜெர்மனியில் கரோனாவை கடுப்படுத்த ஊரடங்கு புதன்கிழமை முதல் அமலுக்கு வருவதாக ஜெர்மனி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ கரோனா கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது தொடர்பாக மாகாண அரசுகளுடன் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள், வார சந்தைகள் மட்டுமே மக்களின் தேவைகளுக்காக திறந்து வைக்கப்படும். ஊரடங்கு புதன்கிழமை முதல் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா பலி சில நாட்களாக அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர ஜெர்மனி அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஜெர்மனியில் கரோனா பரவலைத் தடுக்கக் கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அமைச்சர்களுடன் ஆலோசனையில் சில நாட்களுக்கு முன்னர் ஈடுபட்டார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.