

நியூயார்க் சிட்டி அமைந்துள்ள தேவாலயத்தின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து நியூயார்க் சிட்டி போலீஸார் தரப்பில், “நியூயார்க் சிட்டியில் அமைந்துள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளிப்புறந்தில் நின்றுகொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இரு துப்பாக்கிகளை வைத்திருந்தார்.
மேலும் அவர் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, என்னைக் கொல்லுங்கள் என்று கத்தினார். இந்தத் தாக்குதலில் யாருக்கு காயம் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 50 வயது இருக்கும் என்றும், போலீஸார் நடத்திய தாக்குதலில் அவர் செயிண்ட் லுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேவாலயத் தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, “கைகளில் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரைப் பார்த்து நான் ஓடத் தொடங்கினேன். அவர் எந்த இலக்கும் இல்லாமல் அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட ஆரம்பித்தார்” என்றார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் நிலையில், தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நியூயார்க் சிட்டி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.