

ஜெர்மனியில் செயல்படும் ஜலன்டோ எஸ்இ நிறுவனத்தின் இணை தலைமைச் செயல் அதிகாரி ரூபின் ரிட்டர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
மாஜிஸ்திரேட்டாக உள்ள மனைவி தனது எதிர்காலத்தை திட்டமிட வசதியாகவும், 2 குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது வேலையில் இருந்து அடுத்த ஆண்டுஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக 11.20 கோடி டாலர் (9.3 கோடி யூரோ) தொகையை அவர் இழப்பார் என கணக்கிடப்பட்டுள்ளது.
பேஷன் விற்பனையகமாக ஜலன்டோ விளங்குகிறது. இந்நிறுவனத்தில் 2018-ம் ஆண்டுதான் ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. குறித்த காலத்துக்கு முன்பாகவே இவர் பதவியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததால் இவருக்கு அந்த ஊக்கத் தொகை கிடைக்காது.
தனது மனைவி நீதிபதி பதவியை தொடர விரும்பியதால் அவருக்கு உதவும் வகையில் குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்இந்நிறுவனம் விளம்பரத்துக்காக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் கூறினார். பெண்கள் சார்ந்த பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பெண்களே இடம்பெறவில்லை என கடந்த ஆண்டு ஆல்பிரைட்அறக்கட்டளை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியில்தான் பாலின பேதம் அதிகம் பார்க்கப்படுவதான குற்றச்சாட்டு நிலவுகிறது. அதிலும் ஊதிய விகிதத்திலும் பெருமளவு வித்தியாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உயர் பதவி வகிக்கும் ஆண்கள் தங்களது பதவியை துறப்பது என்பது ஜெர்மனியில் மிகவும் அரிதான நிகழ்வாகும். 2007-ம் ஆண்டில் ஜெர்மனியின் துணை பிரதமராக இருந்த பிரான்ஸ் மியூன்டெபெரிங், தனது மனைவிக்கு புற்றுநோய் இருப்பதால் அவரை கவனித்து கொள்வதற்காக பதவி விலகினார்.
கடந்த ஆண்டு அலியான்ஸ் குளோபல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியாஸ் உட்டர்மான் தனது மனைவி தொழில்துறையில் ஈடுபட வசதியாக பதவி விலகினார்.