Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் நாசா திட்டத்தில் இடம்பிடித்துள்ள இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரி

ராஜா சாரி

வாஷிங்டன்

அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவின் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில், இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரி இடம்பெற்றுள்ளார்.

நாசா, தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ், நிலவுக்கு விண்கலம் மூலம் 18 விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது. அந்த விண்வெளி வீரர், வீராங்கனைகள் பட்டியலை அண்மையில் இறுதி செய்து நாசா அறிவித்திருக்கிறது. இதில் 9 விண்வெளி வீரர்களும், 9 விண்வெளி வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஒரு வீரரும் வீராங்கனையும், 2024-ம் ஆண்டு நிலவின் தெற்குப் பகுதியில் கால் பதிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு அங்கு 1972-ம் ஆண்டில்தான் நாசா அனுப்பிய அப்பல்லோ 17 விண்கலத்தில் சென்ற வீரர்கள் நிலவில் தரையிறங்கினர். அதன்பிறகு நாசா சார்பில் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது.

இந்த வீரர்கள் குழுவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி என்ற அமெரிக்க விமானப் படை அதிகாரியும் இடம்பிடித்துள்ளார்.

பூர்வீகம் ஹைதராபாத்

கடந்த 1977-ம் ஆண்டு விஸ்கான்சின் மாகாணத்தின் உள்ள மில்வாகி நகரில் பிறந்தவர் ராஜா சாரி. இவரது முழுப்பெயர் ராஜா ஜான் உர்புத்தூர் சாரி. இவருடைய தந்தை நிவாஸ் வி.சாரி, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். பொறியாளரான இவர், அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார். அங்கேயே பிறந்து படித்த ராஜா சாரி, பட்டங்கள் பல பெற்று அமெரிக்காவிலேயே பணி புரிந்து வருகிறார்.

கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப் படை கல்லூரியில் இருந்து விண்வெளிப் பொறியியல் பட்டம், மசாசூசெட்ஸ் அறிவியல் நிறுவனத்தில் இருந்து ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளித் துறையில் முதுகலை பட்டமும் ராஜா சாரி பெற்றுள்ளார்.

மேலும், மேரிலேண்டில் உள்ள அமெரிக்க கடற்படை பயிற்சி பைலட் கல்லூரியிலும் இவர் விமானியாக தகுதி பெற்றிருக்கிறார். கன்சாஸில் உள்ள ராணுவ கட்டுப்பாட்டு கல்லூரியிலும் இவர் பயிற்சி முடித்தார். 43 வயதாகும் ராஜா சாரி, அமெரிக்காவின் விண்வெளி அகாடமியில் பணிபுரிந்து வருகிறார். 2017-ல் விண்வெளி வீரராக நாசாவில் இணைந்தார்.

இதுகுறித்து நாசா துணைத் தலைவர் மைக் பென்ஸ் (ஆர்டெமிஸ் பிரிவு) புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் கூறும்போது, ‘‘நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் 30 வயது முதல் 55 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள் உள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x