வறுமை ஒழிப்பு நிபுணர் ஆங்கஸ் டீட்டனுக்கு பொருளாதார நோபல்

வறுமை ஒழிப்பு நிபுணர் ஆங்கஸ் டீட்டனுக்கு பொருளாதார நோபல்
Updated on
2 min read

2015-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆங்கஸ் டீட்டன் என்பவருக்கு அறிவிக்கப்பட்டது.

'நுகர்வு, வறுமை மற்றும் நலன் குறித்த இவரது ஆய்வுக்காக' நோபல் வழங்கப்பட்டதாக அகாடமி தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆங்கஸ் டீட்டன் 1945-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். இங்கிலாந்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய பிறகு பிரிட்டனிலிருந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்துக்கு 1983-ம் ஆண்டு சென்றார்.

நுகர்வு பெரிதும் சிறிதும்

நலத்திட்டங்களை வளர்த்தெடுப்பது மற்றும் வறுமையைக் குறைப்பது என்பதை நோக்கிய பொருளாதார கொள்கையை வடிவமைப்பதில் ஒவ்வொரு தனிநபரின் நுகர்வுக்கான தெரிவுகளை நாம் முதலில் புரிந்து கொள்வது அவசியம். இந்தப் புரிதலின் அவசியத்தை ஆங்கஸ் டீட்டன் பிறரைவிட சிறப்பாக புரிந்து வைத்திருப்பவர்.

விவரமான தனிநபர் தெரிவுகளையும் அதன் ஒட்டுமொத்தமான திரண்ட விளைவுகளையும் இணைத்து இவரது ஆய்வு நுண்பொருளாதாரவியல் மற்றும் பெரும் பொருளாதாரவியல் மற்றும் வளர்ச்சிப் பொருளாதாரம் ஆகிய புலங்களை மாற்ற உதவி புரிந்தது.

நோபல் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆங்கஸ் டீட்டனின் வேலைப்பாடு 3 மைய கேள்விகளை உள்ளடக்கி ஆய்வு செய்கிறது.

பல்வேறு பொருட்களில் நுகர்வோர் எவ்வாறு செலவிடுகின்றனர்?

இந்தக் கேள்விக்கான விடை கொள்கை சீர்த்திருத்தங்களை வடிவமைக்க உதவுவது. அதாவது நுகர்வு வரி விதிப்புகளில் செய்யப்படும் மாற்றங்கள் எப்படி பல்வேறு மக்கள் குழுக்களின் நலனில் தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு இந்த கேள்விக்கான பதில் முக்கியத்துவம் வாய்ந்தது.

1980-ம் ஆண்டு வாக்கில் வெளிவந்த இவரது முதல் படைப்பில் டீட்டன், ஒரு லட்சிய தேவை ஒழுங்கமைப்பை உருவாக்கினார். அதாவது ஒவ்வொரு பொருளுக்குமான தேவை எப்படி அனைத்து பொருட்களின் விலைகள் மற்றும் தனிநபர் வருவாய்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மதிப்பிடும் ஒரு எளிய முறையை உருவாக்கினார். இவரது இந்த அணுகுமுறை மற்றும் இதன் பிந்தைய மாற்றங்கள் தற்போது கல்விப்புலத்திலும் சரி, அரசுசார்ந்த கொள்கை வகுத்தலிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

சமூகத்தின் வருவாயில் எவ்வளவு செலவழிக்கப்பட்டு, எவ்வளவு சேமிக்கப்படுகிறது?

மூலதன உருவாக்கம் மற்றும் அதன் வர்த்தக சுழற்சி பரிமாணங்களை விளக்க, வருவாய் மற்றும் காலப்போக்கிலான செலவினம் ஆகியவற்றிற்கு இடையேயான உறவுகளை புரிந்து கொள்ளுதல் அவசியம். 1990-ம் ஆண்டுகளில் இவர் வெளியிட்ட பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் தனிநபர் வருவாய் தரவு மற்றும் ஒட்டுமொத்த வருவாய் தரவின் அவசியத்தை உணர்த்தியது. இந்த முறைதான் தற்போது பெரும் பொருளாதார ஆய்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நலம் மற்றும் வறுமையை எந்த சிறந்த வழியில் அளவிடலாம் அல்லது ஆராயலாம்?

தனிநபரின் வீட்டுபயோக நுகர்வு அளவுகள் எப்படி பொருளாதார வளர்ச்சி நிலையை கண்டுணர பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இவரது ஆய்வுகள் அறிவுறுத்தியது. வீட்டு உபயோக நுகர்வு தரவு என்பது வருவாய் மற்றும் கலோரி உட்கொள்ளும் அளவு மற்றும் குடும்பத்தினுள் பாலின பேதத்தின் வீச்சு மற்றும் பரப்பு ஆகியவற்றைத் தீர்மானிக்க எப்படி உதவுகிறது, இதன் மூலம் வறுமையை எப்படி புரிந்து கொள்வது என்பதை டீட்டனின் சமீபத்திய ஆய்வுகள் எடுத்தியம்பின.

பொருளாதார ஆய்வு வெறும் கல்விப்புல கோட்பாட்டு மட்டத்திலிருந்து கள ஆய்வு மற்றும் தனிநபர் தரவுகளை நோக்கி நகர்ந்திருப்பது டீட்டனால் என்றால் அது மிகையாகாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in