

அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் இந்த ஆண்டின் சிறந்த நபராக டைம் இதழில் இடம்பெற்றுள்ளனர்.
அட்டைப் படத்தில் அவர்களது புகைப்படத்தை வெளியிட்ட டைம் இதழ், 'அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அமெரிக்கத் தேர்தலை ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் எவ்வாறு கையாண்டார்கள் என்பது குறித்து டைம் இதழ் பாராட்டி எழுதியுள்ளது.
காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம் இதழின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.
வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதிகள் வாக்குகளில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
ஜனவரி 20-ம் தேதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்பார்.