

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை புதிய சபாநாயகராக பால் ரியான் (45) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அவை, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையை போன்றது. இதன் 54-வது சபாநாய கராக, ரியான் நேற்று அவை உறுப்பி னர்களால் தேர்வு செய்யப்பட்டார். இவர் இதற்கு முன் குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
அமெரிக்க துணை அதிபருக்குப் பிறகு அதிக அதிகாரம் கொண்டதாக இப்பதவி கருதப்படுகிறது. பிரதிநிதிகள் அவை சபாநாயகராக இருந்த ஜான் போனெரின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால் இப்பதவிக்கு ரியான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் ரியானை அழைத்துப் பேசினார். ரியானுடன் தம்மால் இணைந்து பணியாற்றி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்” என்று ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதிநிதிகள் அவைக்கு முதன் முதலில் 1999-ல் ரியான் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 16 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
சபாநாயகராக பதவியேற்ற பின் பால் ரியான் கூறும்போது, “வளர்ச்சியை நோக்கி புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்” என்றார். கடந்த 2008-ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ரியான் வாக்களித்தார்.
2006-ம் ஆண்டு அவர் இந்தியா வந்துள்ளார். அப்போதைய சபாநாயகர் தலைமையில் இந்தியா வந்த எம்.பி.க்கள் குழுவில் ரியான் இடம்பெற்றிருந்தார்.