

நுரையீரல் புற்று நோயை எதிர்க்கும் மைல்கல் கண்டுபிடிப்பான Keytruda என்ற மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் (USFDA) அனுமதி அளித்துள்ளது.
புற்று நோய் வகைகளில் மிகவும் பயங்கரமான நுரையீரல் புற்று நோய் சிகிச்சையில் இந்த மருந்துக் கண்டுபிடிக்கப் பட்டது புற்று நோய் ஆய்வு மற்றும் சிகிச்சை முறைகளில் பெரிய சிந்தனை மாற்றப் புரட்சியாகக் கருதப்படுகிறது.
கீமோதெரப்பிக்கும் அடங்காத அபாயகரமான நுரையீரல் புற்று நோயின் தீவிரத்தை பெருமளவு குறைத்து ஆயுளை நீட்டிப்பதாக இந்த மருந்து கருதப்படுகிறது.
கீட்ரூடா அதாவது pembrolizumab என்ற இந்த மருந்து சுமார் 500 நுரையீரல் புற்று நோயாளிகள் மூலம் பரிசோதிக்கப்பட்டது. அதாவது சிறிய செல் அல்லாத நுரையீரல் புற்று நோய் உள்ளவர்களிடத்தில் இந்த மருந்து சோதிக்கப்பட்டது. புற்றுநோய் செல்களை அழிப்பதில் இதன் திறன் அபரிமிதமனதாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.
இதனையடுத்து அக்டோபர் 2014-ல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகம் இந்த மருந்துக்கு "சாதனை சிகிச்சை மருந்து" என்ற தகுதியை வழங்கியது. இதனையடுத்து இம்மருந்துக்கு அனுமதியை வெகுவிரைவில் வழங்க வழிவகை செய்தது அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம்.
இந்த மருத்துவ ஆய்வின் முக்கிய ஆய்வாளரான டாக்டர் எட்வர்ட் கேரன் கூறும்போது, “இந்த மருந்து நுரையீரல் புற்று நோய் சிகிச்சை வழிமுறைகளையே மாற்றி அமைக்கக் கூடியது.
மருந்தின் தரமும் நோயை எதிர்க்கும் காலநேர அளவிலும் இதற்கு முன்பாக நுரையீரல் புற்று நோய் சிகிச்சையில் காண முடியாதது. பல்வேறு நச்சுற்பத்திகளைச் செய்யும் கீமோதெரபியை தவிர்க்கவும் இந்த மருந்து முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுதான் இந்த மருந்துக் கண்டுபிடிப்பின் சாதனை.
3 ஆண்டுகால கிளினிக்கல் மருந்துப் பரிசோதனையில் நுரையீரல் புற்று நோய் கட்டியின் அளவு வெகுவாகக் குறைந்தது. சிகிச்சைப் பெற்றவர்களில் கட்டிகள் குறைந்த நோயாளிகளின் விகிதம் 19% என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நுரையீரல் புற்று நோயின் தாக்கங்களை இந்த மருந்து ஒரு ஆண்டில் குறைத்து விடுகிறது, இது நுரையீரல் புற்று நோய் சிகிச்சையில் மிகவும் வேகமான நோய் எதிர்ப்பு காலநிலையாகும்” என்றார்.
மெலனோமா என்ற தோல்புற்று நோய் சிகிச்சையில் நோய் முற்றியவர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்ததில் கீட்ரூடா என்ற மருந்தின் பங்கு மிக அதிகம். நோய் எதிர்ப்பு மருந்தான இது PD-1 என்ற புரோட்டீனை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. PD-1,PD-L1 புரோட்டீன்கள் ஊடாடி புற்று நோய்க் கட்டிகள் தன்னைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொள்கிறது. இதனை கீட்ரூடா மருந்து தடுத்து விடுகிறது. அதாவது நோயாளிகளின் நோய் எதிர்ப்புச் சக்திகள் மூலம் புற்றை பாதுகாக்கும் புரோட்டீன்களில் வேலை செய்யும் மருந்து கீட்ரூடா என்கிறார் ஆய்வாளர் எட்வர்ட் கேரன்.
இவ்வகை நுரையீரல் புற்று கீமோதெரபிக்கும் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.