

வளர்ந்த நாடுகள் அதிக அளவிலான கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கி உள்ளன ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச குழந்தைகள் அமைப்பான ஆம்னெஸ்டி கூறும்போது,” வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு 2021 ஆம் ஆண்டுவரை தேவையான கரோனா தடுப்பு மருந்தை பெற்றுள்ளன. இதனால் ஏழை நாடுகள் கரோனா தடுப்பு மருந்தை இழக்கக் கூடும். இதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டுவரை 70 ஏழை நாடுகளில் 10 பேரில் ஒருவர் மட்டுமே கரோனா தடுப்பு மருந்தை பெறுவர்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, கரோனா வைரஸுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாமை பிரிட்டன் அரசு தொடங்கியுள்ளது. பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு மருந்து 95 சதவீதம் கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.