

அடுத்த மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்கு மேற்கொள்ளும் பயணம், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் பிரிட்டன் வருகையுடன் ஒப்பு நோக்கத்தக்கதல்ல என்று டேவிட் கேமரூன் அமைச்சரவையில் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக இருக்கும் பிரீதி படேல் தெரிவித்துள்ளார்.
"ஒன்று அரசுமுறை பயணம். அதாவது முன்கூட்டியே தீர்மானித்து, ஒப்புக் கொண்ட பயணமாகும். ஆனால் இது மேலும் நெருக்கமான பயணமாகும். அதாவது இந்தியா மீதான டேவிட் கேமரூனின் சொந்த ஆர்வத்தை பிரதிபலிக்கக் கூடியது மோடியின் வருகை" என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் தெரிவித்தார்.
“பிரதமர் மோடியின் இந்தப் பயணம் குறிப்பிடத்தகுந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமர் மோடி முதன்முறையாக பிரிட்டன் வருகிறார். ஆகவே இந்த நிகழ்வை எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்த பாடுபடுவோம். இது மிகவும் உயர்மட்ட அரசுகளுக்கு இடையிலான சந்திப்பாகும், பயணமாகும்.
இந்தியா குறித்த பிரதமர் மோடியின் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பிரிட்டன் ஒத்துழைக்கும், ஒன்று சேரும். இந்தியாவின் வளர்ச்சி குறித்து டேவிட் கேமரூன் மிகவும் நேசத்தன்மையுடன் வெளிப்படையாக திட்டமிட்டுள்ளார். எனவே இந்தியாவின் வளர்ச்சி குறித்த மோடியின் பார்வைக்கு பிரிட்டனின் ஆதரவை நிரூபிக்கும் வாய்ப்பாகவே பிரதமர் மோடியின் வருகையைப் பார்க்கிறோம்.
வெம்ப்லி மைதானத்தில் 70,000 அயல்நாடு வாழ் இந்தியர்களுடனான வரவேற்பு நிகழ்ச்சி மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தக் கூடியது.
வர்த்தகம், தொழில், முதலீடுகள், மற்றும் வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவை இந்த வருகையின் பிரதான திட்டங்களாக உள்ளன. 2014-15-ல் பிரிட்டனின் 3வது பெரிய வேலை வாய்ப்பு உருவாக்க நாடாக இந்தியா திகழ்கிறது.
மோடியின் வருகையை 'இந்தியா-யு.கே உறவு, புதிய உத்வேகம், புதிய கவனம், புதிய ஆற்றல் என்பதாக பிரிட்டன் அரசு விளம்பரப்படுத்தும்” என்றார் பிரீதி படேல்.