

ஜெர்மனியில் கரோனாவைக் கட்டுப்படுத்த கிறிஸ்துமஸுக்கு முன்னதாக மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பா கூறும்போது, “ கிறிஸ்துமஸுக்கு முன்னதாக ஜெர்மனியில் ஊரடங்கு விதிக்கப்படலாம். கரோன பரவியதன் காரணமாக சில நாட்களாகக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும், அதன் பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, விரைவில் ஊரடங்கு விதிக்கப்படலாம்” என்றார்.
வரும் வாரங்களில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் ஜெர்மனி மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்தனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.