

ஈரானின் அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸதே. இவர்தான் அணு ஆயுத ஆராய்ச்சியின் மூளையாக செயல்பட்டு வந்தார்.
நாட்டின் அணு சக்தித் துறையில் மிகவும் முக்கிய விஞ்ஞானியான மொஹ்சென், ‘அணு குண்டின் தந்தை’ என்றே ஈரான் மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் புறநகர் பகுதி வழியாக அவர் காரில் சென்று கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல், அமெரிக்கா இருக்கலாம் என்று ஈரான் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஈரான் ராணுவ துணை கமாண்டர் அலி பதாவி நேற்று கூறியதாவது:
செயற்கைக் கோள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய இயந்திர துப்பாக்கி மற்றும், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இயந்திரத் துப்பாக்கி மூலம்அணு விஞ்ஞானி மொஹ்சென்னை சுட்டுக் கொன்றுள்ளனர்.
காரில் இந்த விஞ்ஞானியின் முகத்தை மட்டும் மிகவும் பெரிதாகப் படம் பிடித்து துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அவர் மீது 13 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன. ஆனால், 25 சென்டி மீட்டர் அருகில் அமர்ந்திருந்த விஞ்ஞானி மொஹ்சென்னின் மனைவி மீது ஒரு துப்பாக்கிக் குண்டு கூட பாயவில்லை. இந்த படுகொலை எல்லாம் இணையதளம் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தில் தீவிரவாதிகள் யாரும் இல்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை
இவ்வாறு துணை கமாண்டர் அலி பதாவி கூறினார்.