

ஐரோப்பாவில் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 55,000 -ஐ கடந்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ” நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 175 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 55,155 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 11,022 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் கரோனாவுக்கு 22 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலக்கட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் நல்ல முடிவை தந்துள்ளன.. கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.