Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை செய்த நாசா

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் முள்ளங்கி அறுவடை செய்த விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ்.

வாஷிங்டன்

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமானது பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளன. இந்த நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுவது வழக்கம்.

அவ்வாறு அங்கு தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு, பூமியில் கிடைப்பது போன்ற உணவுகள் கிடைக்காது. இதனால் அவர்கள், வைட்டமின் சத்துகள் அடங்கிய மாத்திரைகளையே உணவாக உட்கொள்வார்கள். அவர்களுக்கு சத்தான உணவு வழங்க புவி ஈர்ப்பு விசை சிறிதும் இல்லாத விண்வெளி நிலையத்தில் காய்கறிச் செடிகளை வளர்க்கும் ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்காக, குளிர்சாதனப் பெட்டி போன்ற ஒரு இயந்திரத்தை உருவாக்கி, அதில் செடிகள் வளர தேவையான ஆக்சிஜன் வாயு, செயற்கை சூரிய ஒளியை உமிழும் கருவி ஆகியவை இணைக்கப்பட்டன.

அந்த இயந்திரத்துடன், பூமியில் இருந்து மண், உரம், சில செடி வகைகள் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு கடந்த மாதம் பயணித்தனர். பின்னர், அந்த செடிகளை அந்த இயந்திரத்துக்குள் வைத்து தண்ணீர் ஊற்றி விஞ்ஞானிகள் பராமரித்தனர்.

இதில் பல செடிகள் பாதியிலேயே அழுகி விட, முள்ளங்கிச் செடி மட்டும் 27 நாட்களில் முழுவதுமாக வளர்ந்தது.

இதையடுத்து, இரு தினங்களுக்கு முன்பு கேட் ரூபின்ஸ் என்ற விண்வெளி வீராங்கனை இந்த முள்ளங்கி செடியை அறுவடை செய்தார். இதுதொடர்பான வீடியோவை நாசா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

விண்வெளியில் ஒரு காய்கறியை பயிரிட்டு அறுவடை செய்வது இதுவே முதல் முறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x