Published : 04 Dec 2020 04:47 PM
Last Updated : 04 Dec 2020 04:47 PM

அமெரிக்க மக்கள் 100 நாட்கள் முகக்கவசம் அணிய வேண்டும்: ஜோ பைடன்

கரோனாவைக் கட்டுப்படுத்த 100 நாட்களுக்கு அமெரிக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ பைடன் கூறும்போது, “கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்க மக்கள் 100 நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், கரோனா தடுப்பு மருந்துகள் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கும் வகையில் தொடர் பேச்சுவார்த்தையை அவரது நிர்வாகம் நடத்தி வருகிறது.

அடுத்த வருடம் பிப்ரவரி மாத இறுதிக்குள் அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றியை எட்டியுள்ளன.

உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x