

ஸ்விட்சர்லாந்தில் கரோனா மோசமான நிலையில் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் எலைன் பெர்சட் கூறும்போது, “ ஸ்விட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மோசமான நிலையை அடைந்துள்ளது. நாம் கரோனாவின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது. எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் சுவிட்சர்லாந்தில் 4,455 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றியை எட்டியுள்ளன.
உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.
லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது.