Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கை புதிதாக உரிமை கொண்டாடி சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தகவல்

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15-ம் தேதி இந்தியவீரர்கள் உயிரிழக்க காரணமானமோதலை, சீன அரசு திட்டமிட்டு நடத்தியதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்கள் இடையே கடந்த ஜூன்15-ம் தேதி இரவு கடும் மோதல்ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதுபோல் சீனத் தரப்பிலும் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்கா – சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறு ஆய்வு ஆணையம் நேற்று முன்தினம் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

இந்திய – சீன எல்லையில் சுமார் 8 மாதங்களாக நீடிக்கும்பதற்ற நிலையானது, பல தசாப்தங்களில் மிகக் கடுமையான எல்லைப் பிரச்சினை ஆகும். கடந்த மே மாதம் தொடங்கி எல்லையின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான மோதலுக்குப் பிறகு கல்வான் பள்ளத்தாக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை சீன அரசு முன்கூட்டியே திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. எவ்வளவு பேர் கொல்லப்பட வேண்டும் என்பது உட்படஇதில் திட்டமிடப்பட்டிருக்கலாம்.

உதாரணத்துக்கு இந்த மோதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு,‘எல்லையில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த சண்டையிடுங்கள்’ என சீன ராணுவத்தை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஊக்குவித்தார். மோதலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, கல்வான் பள்ளத்தாக்கில் சுமார் 1,000 வீரர்களுடன் தளவாடங்கள் பெருமளவில் குவிக்கப்பட்டதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

மேலும் இந்த மோதலுக்கு இரு வாரங்களுக்கு முன்பு சீனஅரசின் குளோபல் டைம்ஸ்நாளேடு தனது தலையங்கத்தில், “அமெரிக்கா – சீனா இடையிலான போட்டியில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளில் மிகப் பெரிய பாதிப்பை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்தது. இதனை, இந்திய எல்லையில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்ற சீனத் தலைவர்களின் விருப்பத்துக்கான மற்றொருசமிக்ஞையாக இதனைக் கருதலாம். ஜூன் 15 மோதலுக்குப் பிறகுகல்வான் பள்ளத்தாக்கு முழுவதிலும் தங்களுக்கு உரிமை உள்ளதாக சீனா கூறியது முற்றிலும் புதிய உரிமைகோரல் ஆகும். யதார்த்த நிலைக்கு முற்றிலும் மாறுபட்டது. இந்திய – சீன எல்லையில் இரு நாட்டு வீரர்களும் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுவது வழக்கம் என்றாலும், ஜி ஜின்பிங் 2012-ல் அதிபரான பிறகு இரு நாடுகள் இடையே எல்லையில் 5 முறை பெரிய அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x