

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே பாதுகாப்பு மிகுந்த மகர மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது தொடர்பாக கைதிகள் நேற்று முன்தினம் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சமையல் அறைகளுக்கு தீ வைத்த கைதிகள், 2 வார்டன்களை பிணைக் கைதிகளாக பிடித்துக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் வரவழைக்கப்பட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 2 அதிகாரிகளும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இலங்கை சிறைகளில் 10 ஆயிரம் கைதிகளுக்கு மட்டுமே இடவசதி உள்ள நிலையில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறைகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது தொடர்பாக கடந்த சில வாரங்களாக கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா தொற்று ஏற்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை ஆயிரத்தை கடந்தது. இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் போகம்பர மத்திய சிறையில் நடந்த போராட்டத்தின் போது கைதி ஒருவர் தப்பிச் செல்லும் முயற்சியில் சுவரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.