இளம் திறமைகளை கவுரவிக்கும் பாஃப்தா: தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்

இளம் திறமைகளை கவுரவிக்கும் பாஃப்தா: தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
Updated on
1 min read

வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை கவுரவிக்கும் பாஃப்தா அமைப்பு புதிய முன்னெடுப்புக்குத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிக் கலைகளுக்கான பிரிட்டிஷ் அகாடமி (பாஃப்தா) ப்ரேக்த்ரூ இனிஷியேட்டிவ் என்று இந்த முன்னெடுப்புக்குப் பெயர் வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் திரைப்படங்கள், விளையாட்டு அல்லது தொலைக்காட்சியில் ஐந்து திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொண்டாடி, அங்கீகரிக்கவுள்ளது

நெட்ஃபிளிக்ஸ் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். "நம்பிக்கை தரும் கலைஞர்களை உலகப் புகழ் பெற்ற ஒரு அமைப்பு ஆதரவு தரும் தனித்துவமான வாய்ப்பு இது. இதன் மூலம் உலகின் மற்ற இடங்களில் இருக்கும் திறமையாளர்களின் தொடர்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பாஃப்தா விருதுகளில் வென்றவர்கள் மற்றும் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் வழிகாட்டுதலும் கிடைக்கும். இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உலக அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் அந்த அற்புதத் திறமைகளைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்" என்று ரஹ்மான் கூறியுள்ளார்.

இதற்கான விண்ணப்பங்களை இப்போது பூர்த்தி செய்து அனுப்பலாம். பிரிட்டிஷ் திறமையாளர்களுக்கும், இந்தியாவில் வளரும் படைப்பாளிகளுக்கும் இடையே நல்ல உறவை வளர்க்க இந்த முன்னெடுப்பு உதவும் என பாஃப்தா தெரிவித்துள்ளது. இந்த முன்னெடுப்புக்கு ரஹ்மான் முழு ஆதரவு தந்துள்ளார் என்றும், அவருக்கு இந்த முன்னெடுப்பின் நோக்கம் நன்றாகப் புரிந்திருக்கிறது என்றும் பாஃப்தா அமைப்பின் தலைமை நிர்வாகி அமேண்டா கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த துறை வல்லுநர்கள், இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்து திறமையாளர்களை தேர்வு செய்வார்கள். அவர்களுக்கு ஒரு வருடம் முழுவதும் துறை நிபுணர்களின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் கிடைக்கும். மேலும் இவர்களுக்கு ஒரு வருட காலத்துக்கு, சர்வதேச அளவில் தொடர்புகள், பாஃப்தா நிகழ்ச்சிகளுக்கு, திரையிடல்களுக்கு இலவச அனுமதி, பாஃப்தா தேர்வுகளில் ஓட்டுப் போடவும் முழுமையாக அனுமதி கொடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in