Last Updated : 30 Nov, 2020 02:39 PM

 

Published : 30 Nov 2020 02:39 PM
Last Updated : 30 Nov 2020 02:39 PM

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டுகிறது சீனா: மிகப்பெரிய நீர்மின்நிலையம் அமைக்கத் திட்டம்

கோப்புப்படம்

பெய்ஜிங்

திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணையை எழுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்த அணையில் மிகப்பெரிய நீர்மின்திட்டத்தைச் செயல்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவின் 14-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டும் திட்டம் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் சீன அரசின் அதிகாரபூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அரசின் நீர்மின்சக்தி நிறுவனமான பவர்சைனா, திபெத் சுயாட்சி மண்டல அரசுடன் இந்தத் திட்டத்துக்காகக் கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி திபெத்தியிலிருந்து பாயும் பிரம்மபுத்திரா நதியின் (யார்லங் ஜாங்போ நதி) குறுக்கே இந்த அணை கட்டப்பட உள்ளது.

சீனாவின் மின்சக்தி கட்டுமானத்தின் தலைவர் யான் ஹியாங் கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “யார்லங் ஜாங்போ நதியின் (பிரம்மபுத்திரா நதி) குறுக்கே மிகப்பெரிய நீர்மின்திட்டத்தை சீனா உருவாக்க உள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர்வளத்தைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும்.

சீனாவின் 14-வது ஐந்தாண்டுத் திட்டம் 2021 முதல் 2025ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டும் திட்டம் இருக்கும். அதுமட்டுமல்லாமல் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால இலக்கில் இதுவும் ஒன்றாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் முழுமையான விவரங்களை இன்னும் சீன அரசு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டும் சீனாவின் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தும். பிரம்மபுத்திரா நதி பாயும் நாடுகளான இந்தியா, வங்கதேசம் ஆகியவற்றுக்குச் செல்லும் நீரைத் தடுத்து நிறுத்தும்போது, சர்வதேசப் பிரச்சினையாக மாறலாம்.

பிரம்மபுத்திரா நதி நீரை நம்பியிருக்கும் நாடுகள் நலனுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும் என ஏற்கெனவே சீன அரசிடம் இந்திய அரசு சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இப்போது சீனா இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து சீனா சார்பில் திபெத்தில் 1500 கோடி டாலர் மதிப்பில் ஜாங்மு நீர்மின்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர டாகு, ஜீக்ஸ், ஜியாச்சா ஆகிய பகுதிகளிலும் அணைகளை உருவாக்கியுள்ளது.

இந்த அணைகள் அனைத்தும் ஆறுகளின் மேல் மற்றும் நடுப்பகுதி இணைவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் முறையாக கீழ்நோக்கிப் பாயும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி அணை கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மபுத்திரா அணையின் குறுக்கே கட்டப்படும் இந்த அணை குறித்து சீனாவிலிருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:

''திபெத்தின் கடைசி மாகாணமான அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப்பகுதியான மேடாக் மாகாணத்தில் உள்ள யார்லங் ஜாங்போ நதியின் (பிரம்மபுத்திரா நதி) குறுக்கே மிகப்பெரிய அணை கட்டப்பட உள்ளது.

திபெத் பகுதியில் யார்லங் ஜாங்போ நதி மிகுந்த நீர்வளம் கொண்டதாகும். 2 ஆயிரம் அடி மீட்டர் உயரத்திலிருந்து பாயும் நதியின் நீர் மூலம் 7 கோடி கிலோவாட் மின்சாரம் எடுக்க முடியும். அதாவது ஹூபே மாகாணத்தில் உள்ள மூன்று ஜார்ஜ் மின்நிலையங்களைவிட அதிகமாக மின்சாரம் எடுக்க முடியும்.

இந்த மின்நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் சீனாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்ய முடியும். இதன் மூலம் கிடைக்கும் 30,000 கோடி கிலோவாட் சுத்தமான மின்சாரம் மூலம் சீனாவின் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் இலக்கை 2030-ம் ஆண்டுக்கு முன்பாக எட்ட முடியும்.

2060-ம் ஆண்டுக்குள் முழுமையாக கார்பன் வெளியீட்டை நிறுத்த முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் திபெத் சுயாட்சி அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைக்கும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x