Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் லடாக்கில் கட்டுமானப் பணிகளைத் தொடரும் சீனா: அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி தகவல்

வாஷிங்டன்

இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், ஆத்திரமூட்டும் வகையில் சீனா தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று அமெரிக்காவின் எம்.பி.தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்துமுயற்சித்து வருகிறது. லடாக்கில் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே (எல்ஏசி) சீன வீரர்கள் ஆக்கிரமித்த போது, இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இதையடுத்து அங்கு இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இதுவரை 8 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பும் படைகளை குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. 9-வது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது.

ஒரு பக்கம் வீரர்கள் குவிப்பு, மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தை என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் சீன கம்யூனிஸ்ட் அரசு, தற்போது லடாக் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. செயற்கைக் கோள்களின் புகைப்படங்கள் மூலம் எனக்கு அந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தத் தகவல்கள் உண்மையாக இருந்தால், தென் சீன கடல் பகுதியில் சீனா எப்படி அத்துமீறி செயல்படுகிறதோ, அதே பாணியைதான் லடாக் விஷயத்திலும் செய்கிறது என்பது உறுதியாகும். மேலும், அது ஆத்திரமூட்டும் செயலாகவும் இருக்கும்என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

தென் சீனக் கடல் பகுதியில் தீவுகளை சீனா உருவாக்கி வருகிறது. உண்மைகளை மாற்றி அமைக்க சீனா முயற்சி செய்கிறது. அதேபோல்தான் இப்போதுலடாக்கில் தொடர்ந்து கட்டுமானங்களை அமைக்கிறது. சர்வதேச அளவில் சீனா மீதான முந்தைய பார்வையை நிரூபிக்கும் வகையில், மற்ற நாடுகளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறது. ஆனால், இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும்.

இவ்வாறு ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x