‘அணுகுண்டின் தந்தை’ என்று அறியப்பட்ட ஈரான் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் சுட்டுக்கொலை: இஸ்ரேல் சதி இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு

‘அணுகுண்டின் தந்தை’ என்று அறியப்பட்ட ஈரான் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் சுட்டுக்கொலை: இஸ்ரேல் சதி இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு
Updated on
2 min read

ஈரானின் ‘அணுகுண்டின் தந்தை’என்று அறியப்பட்ட மூத்த அணுவிஞ்ஞானியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானின் அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸதே. இவர்தான் அணு ஆயுத ஆராய்ச்சியின் மூளையாக செயல்பட்டு வந்தார். நாட்டின் அணு சக்தித் துறையில் மிகவும் முக்கிய விஞ்ஞானியான மொஹ்சென், ‘அணு குண்டின் தந்தை’ என்றே ஈரான் மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் புறநகர் பகுதி வழியாக அவர் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, புதர் மறைவில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் ஐந்தாறு பேர் அவர் கார் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் காரை சூழ்ந்து கொண்டு மொஹ்சென் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக ஈரானின் அணு ஆராய்ச்சியில் மொஹ்சென் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து புகார் கூறி வந்தன. இவர்தான் ரகசியமாக அணு ஆயுதங்களை ஈரானுக்கு தயாரித்து வழங்கி வருகிறார் என்று இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானில் அணு ஆயுத ஆராய்ச்சிகள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பல காணாமல் போயின. அந்த ஆவணங்கள் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் வசம் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. இந்நிலையில், அணு விஞ்ஞானி மொஹ்சென் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படுகொலை குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தகவல் தெரியுமா என்பது தெரியவில்லை. எனினும், அமெரிக்கா - இஸ்ரேல் இடையே புலனாய்வுத் தகவல்கள் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்பதால், மொஹ்சென் மீது தாக்குதல் நடக்கும் தகவல் இரு நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் என்று ஈரான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மொஹ்சென் படுகொலை செய்யப்பட்டதற்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவேத் ஜரீப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இது தீவிரவாத தாக்குதல். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கிறது’’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை, புலனாய்வு அமைப்பான சிஐஏ மற்றும் இஸ்ரேல் நாடுகள் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஜனவரி 3-ம் தேதி இராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரான் படை தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதையடுத்து அமெரிக்க உளவாளி ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் பனிப்போர் அதிகரித்துள்ளது.

ஈரானின் அணு ஆயுத திட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா மற்றும் 6 நாடுகளுடன் கடந்த 2015-ம் ஆண்டு அணு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இதில் ஈரான் கையெழுத்திட மறுத்து வருகிறது. முதலில் இந்த ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட இருந்த போது, கடந்த 2018-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப், திடீரென ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். இதனால் பிரச்சினை பெரிதானது. இந்நிலையில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன், ஈரானுடன் அணு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது அந்த நடவடிக்கை தடைபடும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in