

தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் அமைந்துள்ள சீன கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தாய்லாந்தின் இயற்கை எழில்மிக்க சுற்றுலா தலங்களில் புக்கட் தீவும் ஒன்றாகும். இந்தத் தீவு இரண்டு பிரமாண்ட பாலங்கள் மூலம் தாய்லாந்தின் இதர பகுதிகளுடன் இணைக்கப்பட் டுள்ளது.
இத்தீவில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். எனினும் அங்கு சீன வம்சாவளி யினரும் கணிசமாக வாழ்கின்றனர். அங்குள்ள சீனர்களின் புனிதத்தல மான சாம்கோங் கோயிலில் ஆண்டுதோறும் அக்டோபரில் 9 நாட்கள் சைவத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின்போது பெரும் திரளான பக்தர்கள் அலகு குத்தியும் தீ மிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். பழங்காலத்தில் கன்னத்தில் கத்தி, கம்பிகளை மட்டுமே அலகாக குத்திய பக்தர்கள் தற்போது நவீன காலத்துக்கு ஏற்ப துப்பாக்கிகளை அலகாக குத்துகின்றனர்.
சைவத் திருவிழாவையொட்டி புக்கட் தீவில் நேற்றுமுன்தினம் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நகர வீதிகளில் ஊர்வலமாக சென்று கோயிலைச் சென்றடைந்தனர்.
கடந்த 1800-ம் ஆண்டுகளில் புக்கட் தீவில் கலை நிகழ்ச்சிகளை நடத்திய சீன நாடோடி குழுவினர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து சாம்கோங் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து குணமடைந்தனர். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு ஆண்டுதோறும் சைவத் திருவிழா கொண்டாடப்பட்டு வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக கோயில்களில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் பக்தர்கள் அலகு குத்துதல், தீ மிதித்தல் ஆகிய நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். தாய்லாந்தின் புக்கட் தீவில் வசிக்கும் சீன வம்சாவளியினரும் இதே பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பது ஆசிய கலாச்சார ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.