

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலி அரசுக்கும் 3 பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஆப்ரிக்க யூனியனின் மத்தியஸ்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆப்ரிக்க யூனியன் தலைவரும் மவுரி டேனியா அதிபருமான முகமது அவுத் அப்துல் அஜீஸ் மாலி சனிக் கிழமை அளித்த பேட்டியில் கூறியி ருப்பதாவது: மாலி அரசுக்கும் 3 பிரிவினைவாத அமைப்புகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கிடால் நகரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஒப்புக் கொண்டன. இதைய டுத்து மாலி உள்துறை அமைச்சர் சதா சமகே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது உடனடி யாக அமலுக்கு வந்துள்ளது என்றார்.
முன்னதாக, தனது ருவாண்டா பயணத்தை ரத்து செய்துவிட்டு மாலியில் உள்ள கிடால் நகருக்குச் சென்ற அப்துல் அஜீஸ், அஸ்வத் தேசிய விடுதலை இயக்கம் (எம்என்எல்ஏ), ஒருங்கிணைந்த அஸ்வத்துக்கான உயர்நிலைக் குழு (எச்சியுசி) மற்றும் அஸ்வத் அரபு இயக்கம் (எம்ஏஏ) ஆகிய குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவருடன் மாலிக்கான ஐ.நா. அதிகாரி (எம்ஐஎன் யுஎஸ்எம்ஏ) பெர்ட் கோயென்டர்ஸும் சென்றிருந்தார்.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட உறுதுணையாக இருந்த அப்துல் அஜீஸுக்கு மாலி அதிபர் இப்ராஹிம் பூபக்கர் கெய்தா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் பரஸ்பரம் கைதிகளை விடுவிக்க மாலி அரசும் பிரிவினைவாத அமைப் புகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
மாலியின் வடக்கே பாலைவனப் பகுதியில் உள்ளது அஸாவத். திம்புக்து, கிடால், காவோ ஆகிய முக்கிய நகரங்களை உள்ள டக்கிய இப்பகுதியை தனி நாடாக அறிவிக்கக் கோரி கடந்த 1960-களி லிருந்து பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் மாலி அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.
கடந்த சில தினங்களில் கிடால் நகரில் பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்ட 20 மாலி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.