

கேன்ஸ் திரைப்பட விழாவின் தலைவருக்கு கன்னத்தில் முத்தமிட்டதால், தனது நாட்டைச் சேர்ந்த அமைப்பினரிடையே கடும் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார், பிரபல ஈரானிய நடிகை லைலா ஹடாமி.
'எ செபரேஷன்' என்ற ஈரானிய படத்தின் மூலம் உலகம் முழுவதும் திரைப்பட ஆர்வலர்கள், விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஹிடாமி. அந்தப் படம், சிறந்த வெளிநாட்டு மொழி பிரிவில் ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளைக் குவித்தது.
இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஹிடாமி, அந்த விழாவின் தலைவரான கில்லெஸ் ஜாக்கப் (வயது 83) கன்னத்தில் முத்தமிட்டிருக்கிறார். அது, புகைப்படமாக ஈரானிய பத்திரிகைகளில் வெளியானது.
இதையடுத்து, ஹிடாமிக்கு பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஈரானின் இஸ்லாமிய மாணவிகள் அமைப்பு ஒன்று, ஹிடாமிக்கு கசையடி தண்டனையுடன், சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகவுள்ளதாக அந்த அமைப்பு எச்சரித்தது.
இதனிடையே, சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கும் ஈரானிய பெண்கள் தாயகத்தின் நம்பகத்தன்மையையும், புனிதத்தையும் கவனித்தில் கொள்ள வேண்டும் என்றும், உலக அளவில் ஈரானிய பெண்கள் குறித்த தவறான பார்வை ஏற்பட்டுவிட அனுமதிக்கக் கூடாது என்றும் ஈரானின் பண்பாட்டுத் துறையின் துணை அமைச்சர் ஹுசைன் நவுஷபாடி தெரிவித்துள்ளார்.
ஈரானில் கடும் எதிர்ப்பு கிளம்பியதன் தொடர்ச்சியாக, நடிகை லைலா ஹடாமி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக, ஈரானிய சினிமா அமைப்புக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அதில், "நான், சிலரது உணர்வுகளை காயப்படுத்தியிருந்தால், அதற்கு மனதார வருந்துகிறேன். இஸ்லாமிய நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில், நான் தவறு செய்யவில்லை. என்னுடைய தாத்தா வயதையொட்டியவரின் கன்னத்தில் முத்தமிட்டது, மீறலாக எனக்குப் படதாதால்தான் நான் அப்படி நடந்துகொண்டேன்" என்று நடிகை ஹடாமி கூறியுள்ளார்.