

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் கோவிஷீல்டு தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனையில் 90% பலனளித்துள்ளதாக தெரிகிறது.
கரோனாவால் பொதுச் சுகாதாரம், பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வளர்ந்த நாடுகளே விழிபிதுங்கி நிற்கும் சூழலில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு உலகுக்கே நற்செய்தியாக வந்துள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனிக்காவுடன் இணைந்து கோவி ஷீல்டு என்ற தடுப்பூசியை பரிசோதனை செய்து வருகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் பதிவு செய்த ட்வீட்டில், "இன்றைய நாள் கரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கியமானது. ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையின் இடைக்கால முடிவின்படி தடுப்பூசி 70.4% பயனளித்துள்ளது. அதே தடுப்பூசியை இரண்டு தவணையாக செலுத்தியபோது 90% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் இத்தடுப்பூசியைக் குறைந்தவிலையில் கொண்டு சேர்ப்பதில் ஒரு அடி முன்னேறினால் போதும். ஆஸ்ட்ராஜெனிக்காவுடன் இணைந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் 3 பில்லியன் மக்களுக்காவது தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதே எங்களின் இலக்கு.
இதுவரை 23,000 பேர் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். ஆகையால் தடுப்பூசியின் நம்பகட்த்தன்மையை உறுதிப்படுத்த நிறைவான தரவுகள் உள்ளன.
இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள், நிதியுதவி செய்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என நிறைய பேரின் பங்களிப்பு உள்ளது. அவர்களின் பங்களிப்பு இலாமல் இந்தத் தடுப்பூசி சாத்தியமில்லை" எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆஸ்க்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தடுப்பூசியை அவசர நிலை அடிப்படையில் பொதுமக்களிடம் பரிசோதிக்க பிரிட்டன் அனுமதித்தால் அதைக் கொண்டு இந்தியாவில் விண்ணப்பித்து சந்தைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக சீரம் இந்தியா நிறுவனர் பூணாவாலா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.