

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் நகரில் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபருக்கு 30 வயதுக்குள் தான் இருக்கும் என போலீஸார் கணிக்கின்றனர். ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியதால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விஸ்கான்ஸின் துப்பாக்கிச் சூடு தொடர்பாக, எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "மேஃபேர் மாலில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது உள்ளூர் போலீஸாருக்கு உதவியாக மில்வாக்கி கவுன்ட்டி ஷெரிஃப் அலுவலக அதிகாரிகளும், எஃப்பிஐ அதிகாரிகளும் அங்கிருந்தனர். ஆனால், அவசரப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வரும்போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞர் அங்கிருந்து தப்பிவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பதின்ம வயது சிறுவன் உட்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், காயமடைந்தவர்களுக்கு எவ்வளவு தீவிரமாக காயம் ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து தகவலில்லை. இருப்பினும் ஏபிசி செய்தியின்படி யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படும் அளவுக்கு காயமில்லை எனத் தெரிகிறது.
ஷாப்பிங் மாலில் இருந்த சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு குற்றவாளியைப் போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் ஷாப்பிங் மால் துப்பாக்கிச் சூடு வீடியோ அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.