Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

கரோனா, ஹாங்காங் விவகாரங்கள் குறித்து தொடர்ந்து புகார் கூறிவருவதால் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுக்கு சீனா எச்சரிக்கை

ஸ்காட் ஜான் மோரிசன்

பெய்ஜிங்

கரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. இதனால் சீனா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியது. அதற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசும் கருத்துகள் தெரிவித்தது. அத்துடன், ஹாங்காங் மக்களை சீன அரசு ஒடுக்கி வருவதாகவும் அங்கு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதாகவும் ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியது. தவிர ஜப்பானுடன் இணைந்து ஆஸ்திரேலியா புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது.

மேலும், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பைவ் ஐ’ என்ற பெயரில் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன் மூலம் இந்நாடுகள் உளவு தகவல்கள் பரிமாறிக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இந்த நாடுகளும் சீனாவுக்கு எதிராக ஹாங்காங் பிரச்சினையை கையில் எடுத்துள்ளன. இதனால் ஆஸ்திரேலியா மற்றும் ‘பைவ் ஐ’ நாடுகள் மீது சீனா கடும் கோபம் அடைந்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா மீதான அதிருப்திகள் அடங்கிய பட்டியலை, கான்பரா நகரில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் சமீபத்தில் பத்திரிகைளில் வெளியிட்டனர். அவற்றில் 14 குற்றச்சாட்டுகள் இருந்தன. குறிப்பாக கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும், ஹாங்காங்கில் மனித உரிமைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கூறிவருவது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான் நேற்று முன்தினம் கூறியதாவது:

சீனா - ஆஸ்திரேலியா இடையேயான தூதரக உறவு விரிசல் அடையும் வகையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து செயல்படுகிறது. பிரதமர் ஸ்காட் ஜான் மோரிசன் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசு, சீனாவுக்கு எதிராக தூதரக உறவுகள் கெடும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை பல முறை சீனா சுட்டிக்காட்டிவிட்டது. சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டு சீனாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. மேலும், ஆஸ்திரேலிய ஊடகங்களில் சீனாவுக்கு எதிரான கருத்துகள் வலிந்து பரப்பப்படுகின்றன. இதனால் இருநாட்டு தூதரக உறவுகள் முறியும் நிலை ஏற்படலாம்.

ஆஸ்திரேலியா உட்பட 5 நாடுகள் இணைந்து ‘பைவ் ஐ’ அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர்கள் 5 அல்ல 10 கண்கள் கூட வைத்துக் கொள்ளட்டும். ஆனால், சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி விவகாரங்களில் தலையிட யார் முயற்சித்தாலும், அவர்கள் கண்கள் குருடாகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளட்டும். இவ்வாறு லிஜியான் கூறினார்.

ஆனால், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் ஜான் மோரிசன் கூறும்போது, ‘‘ஒவ்வொரு நாட்டுக்கும் அடிப்படை ஒன்று இருக்கிறது. ஒரு நாடு என்ற முறையில் எங்களுக்கும் இந்த அடிப்படை விஷயங்கள் உள்ளன. ஆஸ்திரேலியா எப்போதும் இப்படிதான் என்று சீனா கூறுகிறது. அவர்கள் கூறுவது போலவே, நாங்கள் இப்படியே இருக்கிறோம். அதற்கு ஏன் சீனா பதற்றம் அடைய வேண்டும். எந்த ஒரு நாட்டுக்கும் எதிரியாக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா நினைக்கவில்லை. குறைந்தபட்சம் சீனாவுக்கு என்று சொல்வேன்’’ என்று ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x