

முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில், முதல் வகுப்பு பயணிகளுக்கு கடைசியாக வழங்கிய மதிய உணவு பட்டியல் (மெனு அட்டை), ரூ.59 லட்சத்துக்கு ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் டைட்டானிக் கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இந்நிலையில், மெனு அட்டை நேற்று ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. உயிர் தப்பிய முதல் வகுப்பு பயணி ஆபிரகாம் லிங்கன் சாலமோன் என்பவர் வைத்திருந்த அந்த ‘மெனு’ அட்டையை ஏலம் விடப்பட்டது. அதை அரிய பொருட்களை சேகரிப்பவர் ஒருவர் ரூ.59 லட்சத்துக்கு (88 ஆயிரம் டாலர்) வாங்கி இருக்கிறார்.
அந்த மெனுவில் ஏப்ரல் 14, 1912 என்று தேதி இடம்பெற்றுள்ளது. அந்த மெனுவில் கிரில்டு மட்டன் சாப்ஸ், கஸ்டார்ட் புட்டிங், கார்னர்டு பீப், மாஷ்டு, பிரைடு பொட்டாடோஸ், பிஷ், ஹாம் மற்றும் பீப் உட்பட பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன.