

தென்கொரிய பிரதமராக உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி ஆன் தய்-ஹீயை நியமிக்கப்போவதாக அதிபர் பார்க் கியூன் ஹை அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதலை விரைவில் பெறவுள்ள தாக அதிபர் மாளிகை வட்டாரத் தில் கூறப்படுகிறது. ஆளும் கட்சி யான சியானுரிக்கு அறுதிப்பெரும் பான்மை உள்ளதால், ஆன் தய்-ஹீ பிரதமராவது உறுதியாகிவிட்டது.
கடந்த ஏப்ரல் 16-ம் தேதி தென்கொரியாவின் இன்சியோனி லிருந்து ஜேஜுவுக்கு செல்லும் வழியில் பயணிகள் கப்பல் கடலில் கவிழ்ந்ததில் 300 பேர் உயிரிழந்த னர். இந்த சம்பவத்திற்கு பொறுப் பேற்று பிரதமர் சங் ஹாங்-வோன் பதவி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆன் தய்-ஹீ பிரதமர் பதவியேற்கவுள்ளார்.
இது தொடர்பாக அதிபரின் செய்தித்தொடர்பாளர் மின் கியூங்-வூக் கூறுகையில், “அரசு அமைப்புகளில் சீர்திருத்தப் பணி களை மேற்கொள்ளவும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவும் ஆன் தய்-ஹீதான் சரியான நபர் என்று நம்புகிறோம்” என்றார்.
தேசிய பாதுகாப்பு தலைவர் கிம் ஜாங்-சூ, உளவுத்துறை தலைவர் நாம் ஜே-ஜூன் ஆகியோரின் ராஜி னாமாவை பார்க் ஹியூன் ஹை ஏற்றுக்கொண்டார். கப்பல் விபத்து நிகழ்ந்தபோது, இவர்கள் இருவரும் சரிவர தங்களின் கடமையை நிறைவேற்றவில்லை என்று கடும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
தென்கொரியாவில் ஜூன் 4-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின்போது வெளியாகும் முடிவுகள், அதிபர் பார்க் கியூன் ஹையின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறதா, இல்லையா என்பது தொடர்பாக மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
கப்பல் விபத்தில் அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆளும் கட்சிக்கு பொது மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதை அறிந்த அதிபர் பார்க் கியூன் ஹை, பிரதமர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருவது கவனிக்கத்தக்கது.