Published : 18 Nov 2020 04:12 PM
Last Updated : 18 Nov 2020 04:12 PM

வீட்டிலேயே சுயமாக கரோனா பரிசோதனை; 30 நிமிடங்களுக்குள் முடிவுகள்- அமெரிக்காவில் அறிமுகம்

வீட்டிலேயே சுயமாகக் கரோனா பரிசோதனை செய்து 30 நிமிடங்களுக்குள் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் உபகரணத்துக்கு முதன்முதலாக அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக இயக்குநர் ஜெஃப் ஷுரேன் கூறும்போது ''லூசிரா ஹெல்த் நிறுவனம் சார்பில் இந்த பரிசோதனை உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனக்குக் கோவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதா என்று சந்தேகிக்கும் நபர்கள் வீட்டிலேயே பரிசோதித்து அதன் முடிவுகளை அறியலாம். 14 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், தாங்களாகவே உமிழ்நீர் மாதிரிகளை எடுத்துப் பரிசோதனை செய்ய முடியும்.

எனினும் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளே பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம். இந்த உபகரணத்தை மருத்துவமனைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கரோனா தடுப்பூசி குறித்து நேர்மறையான முடிவுகள் வந்து கொண்டிருந்தாலும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியது அவசியம். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சோதனைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன'' என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் அமெரிக்காவில் 1.1 கோடி மக்களுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x